உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

மாலைதீவில் தாழப்பறந்தது காணாமற்போன மலேசிய விமானமா?

பத்து நாட்களுக்கு முன்னர் காணாமற்போன மலேசிய விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய சமிக்ஞைகள் தமது இராணுவ ராடாரில் பதிவாகியிருப்பதாக, தாய்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது.
மாலைதீவில் தாழப்பறந்தது காணாமற்போன மலேசிய விமானமா?
மலாக்கா நீரிணையை நோக்கி அந்த விமானம் மேற்குப்புறமாகப் பறந்துகொண்டிருந்தது என்பதை இந்த சமிக்ஞைகள் காட்டுவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் இந்தத் தகவல், முன்னர் மலேசியஇராணுவம் தெரிவித்த உறுதிப்படுத்தப்படாத தகவலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
காணாமற்போன விமானம் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மலேசியா முதலில் விடுத்த வேண்டுகோள் குறிப்பானதாக இல்லாமல் இருந்ததால் இந்தத் தரவை இப்போது வரை வெளியிடவில்லை என்று தாய்லாந்து விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் மோண்டோல் சுச்சோகோர்ன் கூறினார்.
இதேவேளை, மற்றுமொரு திருப்பமாக, இந்த விமானம் காணாமற்போன தினத்தில் மாலைதீவின் , குடா ஹுவாதோ தீவில் உள்ள சிலர் வானத்தில் மிகவும் குறைவான உயரத்தில் ஓர் விமானம் பறந்துகொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, மாலைதீவு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்துகின்றனர் என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இது போன்று இதற்கு முன்னர் கிடைத்த பல தகவல்கள் தவறானவை என பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
விமானத்தைத் தேடும் இந்த முயற்சி இப்போது உலகம் முழுவதும் சுமார் 2.24 மில்லியன் சதுர கடல் மைல்கள் பகுதியில் நடைபெறுவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, நியூசிலாந்து, கொரியா, ஜப்பான், ஐக்கிய அரபு இராஜ்ஜியங்கள் உட்பட பல நாடுகள் தமது  விமானங்கள் மற்றும் கப்பல்களை இந்தத் தேடுதல் முயற்சியில் ஈடுபடுத்தியிருக்கின்றன.

0 கருத்துகள்: