அமெரிக்க மனைவியை கொலை செய்த முச்சக்கரவண்டி சாரதி தானும் தற்கொலை
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பாகப் பேசப்பட்ட அமெரிக்க சுற்றுலாப்பயணி முச்சக்கரவண்டி சாரதி காதல் திருமணத்திற்குப் பின் சோகத்தில் முடிந்துள்ளது. காதல் மனைவியைக் கொன்ற கணவன், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த எரின் வில்லிங்கர் சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்தார். காதலின் சின்னமான தாஜ்மகாலின் அழகைப் பார்த்து வியந்தவர், ஆக்ரா நகரில் பரவிக் கிடக்கும் பொலித்தீன் பைகள் மற்றும் குப்பைகளைப் பார்த்து மனம் வருந்தினார். ‘சுத்தமான ஆக்ரா’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, நகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, முச்சக்கர வண்டி சாரதியான பண்டியுடன் காதல் ஏற்பட்டது. இருவரின் காதல் விவகாரம் டெல்லியில் பரவலாகப் பேசப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு சில நாட்களிலேயே கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
எரின், சுற்றுலா காவல்துறை மூலம் புகார் செய்து, குடும்பநல நீதிமன்றத்தை நாடினார். இருப்பினும் இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, எரின் வியாழக்கிழமை பண்டியின் முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பண்டி ஏரினை கொலை செய்து, சடலத்தை வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர், பெட்ரோல் ஊற்றி துணிகளை எரித்ததுடன் சமையல் எரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் தாதியாக பணியாற்றிய எரினுக்கு அங்கு ஓர் அவுஸ்திரேலிய இளைஞனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. எனினும், ஆக்ரா வந்தவர் பண்டியை விரும்பி மணமும் செய்து கொண்டார். இதன் பிறகு அவரை தேடி வந்த அவுஸ்திரேலிய இளைஞரையும் திருப்பி அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயமே கருத்து வேறுபாட்டிற்கு காரணமெனவும், ஏரினிடம் இருந்த பணத்திற்கு ஆசைப்பட்டே பண்டி அவரை திருமணம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment