உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

வெறுப்பேற்றுகிறார் டோனி கங்குலி திடீர் பாய்ச்சல்

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வருகிறது. கடைசியாக அன்னிய மண்ணில் நடந்த 14 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. 

சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து தொடரும் இதில் அடங்கும். அன்னிய மண்ணில் அடுத்தடுத்து சந்தித்து வரும் தோல்வியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மொகிந்தர் அமர்நாத் கூறுகையில், கேப்டன் டோனி தற்காப்பு ஆட்ட யுக்தியை கடைபிடிக்கிறார். 

இதன் மூலம் எதிரணி சரிவில் இருந்து மீண்டு வர வழிவகுக்கிறார். உள்ளூரில் மட்டுமே டோனியின் சாதனை மற்ற இந்திய கேப்டன்களை விட சிறப்பாக இருக்கிறது. வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் மன்சூர் அலிகான் பட்டோடி போன்ற ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய கேப்டன் அணிக்கு தேவையாகும்.

கேப்டன் முன்வரிசையில் களம் இறங்கி அணியை முன்னெடுத்து செல்லும் வகையில் விளையாட வேண்டும். எந்தவொரு டெஸ்ட் அணியின் கேப்டனும் பேட்டிங்கில் 7வது வீரராக களம் இறங்குவதில்லை. டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனியை மாற்ற இது சரியான தருணமாகும். கோஹ்லியை கேப்டனாக நியமிக்கலாம்.

 ஒவ்வொரு வகையான ஆட்டத்துக்கும் தனித்தனி கேப்டன் நியமிக்க வேண்டும் என்றார். சவுரவ் கங்குலி கூறுகையில், டோனியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் வெறுப்பூட்டும் வகையில் உள்ளது. ஆனால் கேப்டனை மாற்றுவது, அணிக்கு இப்போது உகந்ததாக இருக்காது. டெஸ்ட் அணியில் டோனி நீடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் வெளிநாடுகளில் அவர் வெற்றி சதவீதத்தை அதிகரிக்க வேண்டியது முக்கியம். உலக கோப்பை போட்டி நெருங்கி வராவிட்டால் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்க வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்வேன் என்றார். கவாஸ்கர் கூறுகையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனியை நீக்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கவில்லை. 

டோனிக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் அளிக்கலாம் என்பதே எனது எண்ணமாகும். பந்து வீச்சு சரியாக இல்லாதபட்சத்தில் கேப்டனால் ஆட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர முடியாது.

 வெளிநாட்டு மண்ணில் ஏற்பட்ட தோல்விக்காக கேப்டனை மாற்றுவதால் எந்த பயனும் கிடைக்காது என்றார்.

0 கருத்துகள்: