உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

ராஜீவ் கொலை குற்றவாளிகளை ஏற்பது குழப்பகரமான விடயமாகும் -- கெஹெலிய



ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் விடுதலையாகும் பட்சத்தில் இலங்கை வரவிரும்பினால் அவர்களை ஏற்பது குழப்பகரமான விடயமாகவே உள்ளது. 

இது தொடர்பில் சட்டரீதியாக ஆராயவேண்டியுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
 
எனினும் சரணடையும் போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்கின்ற செயற்பாடு இலங்கையில் உள்ளது. இதேவேளை இந்தியாவின் தனித்துவமான நீதித்துறையின் செயற்பாடுகளை நாம் விமர்சிக்க முடியாது. நீதித்துறையின் தீர்ப்பை நாங்கள் மதிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது,
 
இந்தியாவுக்கே உரிய தனித்துவ ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள நீதித்துறையின் செயற்பாடுகளை நாம் எவ்வகையிலும் விமர்சிக்க முடியாது. அவர்களின் சட்ட மற்றும் நீதித்துறைக்கு அமைய ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான தீர்ப்புக்கள் வந்துள்ளன.
 
மேலும் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நோக்கம் கொண்டதாக கூறப்பட்டாலும் நீதிமன்றத்தின் ஊடாகவே அனைத்து நடவடிக்கைகளும் முடிவுசெய்யப்படுகின்றன. எனவே அது நீதித்துறை சார்ந்தது. இந்திய நாட்டுக்கு உரியதான நீதித்துறையை நாம் விமர்சிக்க முடியாது.
 
அது தொடர்பில் எமக்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்களின் நீதித்துறையை நாம் ஒன்றும் கூற முடியாது. அது முறையான விடயமாக அமையாது. நாடு ஒன்றின் நீதித்துறை கட்டமைப்பை மதிக்கவேண்டும். அவர்களின் நீதித்துறை சார்ந்த விடயத்தில் செயற்படுவதற்கும் தீர்மானம் எடுப்பதற்கும் அந்நாட்டுக்கு உரிமை உள்ளது.
 
கேள்வி தற்போது விடுதலை பெறவுள்ள ராஜிவ் கொலை வழக்கின் நால்வரில் இலங்கை வர விரும்புவோரை இலங்கை பொறுப்பேற்குமா?
 
பதில் மிகவும் கஷ்டமான மற்றும் குழப்பகரமான நிலைமையே இதில் காணப்படுகின்றது. எனவே இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு நான் பூரண தகுதியுடையவனாக இல்லை என்றே கருதுகின்றேன். எனவே முழுமையான பதிலை என்னால் வழங்க முடியாது.
 
அது நாட்டின் சட்டக்கட்டமைப்புடன் தொடர்புபட்ட விடயமாகும். ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் விடுதலையாகும் பட்சத்தில் இலங்கை வரவிரும்பினால் அவர்களை ஏற்பது குழப்பகரமான விடயமாகவே உள்ளது. இது தொடர்பில் சட்டரீதியாக ஆராயவேண்டியுள்ளது .சட்டத்துறை சார்ந்தே இதற்கு விடைகாணவேணடும்.
 
மேலும் அவர்கள் 20 வருடங்களாக நாட்டில் இருக்கவில்லை. எனவே குடியுரிமை தொடர்பான குழப்பம் வரலாம். இவை அனைத்தையும் ஆராய்ந்துவிட்டே நாம் தீர்மானிக்கலாம். ஆனால் சரணடையும் போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவித்த செயற்பாடு இலங்கையில் உள்ளது.

0 கருத்துகள்: