எமது கரத்தை பலப்படுத்துங்கள்; ஜ.ம.மு.உப செயலாளர் குகவரதன் கோரிக்கை
கூட்டு ஒப்பந்தம் என்ற கூட்டு சதியே மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும்.
தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூட்டு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உபசெயலாளரும் கொழும்பு மாவட்ட மாகாண சபை வேட்பாளருமான சண். குகவரதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சமூகமொன்றின் முன்னேற்றத்திற்கு அவர்களது பொருளாதாரம் முதுகெலும்பானதாகும். ஆனால் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார நிலையை உயர்த்த முடியாதவாறு கூட்டு ஒப்பந்தம் மூலம் கட்டுப்படுத்தியுள்ளனர். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களே இந்நாட்டின் மிக சிறந்த உழைப்பாளிகள்.
மலைகளிலும் சரிவுகளிலும் ஏறி இறங்கி தொழில் செய்கின்றனர். அவ்வாறு நல்ல உழைப்பாளிகளாக இருந்தும் துரதிஷ்டவசமாக அவர்களது வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் இன்றியுள்ளனர். காலாகாலமாக வறுமையிலேயே வாடி வருகின்றனர். பொருளாதார ரீதியில் மிக மோசமான நிலையில் உள்ளனர்.
இதனால் இவர்களின் அன்றாட வாழ்க்கை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளென அனைத்தும் மிக மோசமான நிலையிலேயே உள்ளது. இதனை மாற்றியமைத்துக் கொள்ளும் பொருளாதார சக்தியும் இவர்களுக்கு கிடையாது.
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூலியை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமே ஆகும். மலையகத்தின் ஏகப்பிரதிநிதியென கூறிக்கொள்ளும் தொழிற்சங்க அரசியல் தலைமைகளும் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் தோட்ட கம்பனிகளும் சேர்ந்து இந்த சதியை செய்கின்றன.
தோட்ட தொழிலாளர்களுக்கு பாதகமான நிபந்தனைகளுடன் மிக குறைந்த கூலியை தீர்மானிப்பதாகவே இவ் ஒப்பந்தம் அமைந்துள்ளது. இதன் மூலம் கூட்டு மொத்த மலையக தொழிலாளர்களினதும் உழைப்பு சுரண்டப்படுகின்றது. இங்கு உழைப்புக்கு ஏற்ற கூலியுமில்லை, வாழ்க்கைச் செலவுக்கேற்ற கூலியுமில்லை.
இந்நிலையில் கடுமையான உழைப்பாளிகளாக இருந்தும் வறுமையிலேயே வாடவேண்டிய நிலைக்கு தோட்ட தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவல நிலைக்கு காரணமான கூட்டு ஒப்பந்ததத்தை கிழித்தெறிய தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடவடிக்கை எடுப்போம். அதற்காக முழு மூச்சுடன் எங்களை தியாகம் செய்து செயற்பட உறுதிபூண்டுள்ளோம். அதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி பெற்றுக் கொடுத்து அவர்களின் பொருளாதார நிலை மேன்பட வழி செய்வோம்.
நடைபெறும் மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு, கம்பஹா மாவ ட்டங்களில் ஏணி சின்னத்திற்கு வாக்க ளித்து எங்கள் கரங்களை பலப்படுத்துங்கள். அது ஒவ்வொரு மலையக தோட்ட தொழிலாளரின் கரத்தையும் பலப்படுத்தும்.
virakesari
0 கருத்துகள்:
Post a Comment