உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

இந்தியாவை வென்றது நியூசிலாந்து



இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் 40 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
 
நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவ் அணியுடன் 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-0 என இழந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
 
இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் திகதி ஆக்லாந்தில் ஆரம்பமாகியது.
 
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்து அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 503 ஓட்டங்களைப்பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மெக்கலம் 224 ஓட்டங்களையும்வில்லியம்ஸன் 113 ஓட்டங்களையும் அண்டர்சன் 74 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக இசாந்த் சர்மா 6 விக்கெட்டுகளையும் சகீர்கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முதலாம் இன்னிங்ஸிற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நியூசிலாந்தின் பந்து வீச்சிற்கு தடுமாறி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களைப்பெற்று 301 ஓட்டங்களால் பின்னிலை பெற்றது.

இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 72 ஓட்டங்களையும் ஜடேஜா ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக வோக்னர் 4 விக்கெட்டுகளையும் போல்ட் மற்றும் சௌத்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் 301 ஓட்டங்களால் முன்னிலை வகிக்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது மளமளவென அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது.
 
இதையடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 407 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
 
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தவான் சதமடித்து கைகொடுக்க இந்திய அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலை காணப்பட்டது. இருப்பினும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சுப் பலத்தினால் இந்திய அணியினால் வெற்றி இலக்கை எளிதில் அடைய முடியவில்லை. 
இந்திய அணி 366 ஓட்டங்களை பெறுவதற்குள் அனைத்து விக்கெட்டகளையும் இழந்து 40 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தவான் 115 ஓட்டங்களையும் விராத் கோலி 67 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
 
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக வோக்னர் 4 விக்கெட்டுகளையும் போல்ட் மற்றும் சௌத்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் பிரண்டன் மெக்கலம் தெரிவு செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முக்கியமானதும் இறுதியுமானதுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி வெலிங்டனில் இடம்பெறவுள்ளது.

0 கருத்துகள்: