I C C உலக T20 பிரதான சுற்று ஆரம்பம் - இந்திய–பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.சி.சி.யின் 5 ஆவது உலக இருபது-–20 கிண்ணத் தொடரின் பிரதான சுற்று இன்று ஆரம்பமாகின்றது. இந்திய-பாகிஸ்தான் அணிகளின் விறுவிறுப்பான போட்டியுடன் ஆரம்பமாகும் இச்சுற்று தொடர்ந்து அனல் பறக்கும் போட்டிகளுடன் இறுதிப்போட்டியை நோக்கி நகரவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 5 ஆவது உல இருபது–20 கிண்ணத் தொடர் பங்களாதேஷில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது. இம்முறை 16 அணிகள் களமிறங்கியுள்ள இத்தொடர் 3 கட்டங்களாக நடைபெறுகின்றது. முதலாம் சுற்று (தகுதிகாண்), பிரதான சுற்று மற்றும் இறுதிச்சுற்று என 3 கட்டங்களாக நடைபெறுகின்றது.
இதில் டெஸ்ட் தரப்படுத்தலில் இறுதி இரு இடங்களை வகிக்கும் பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் ஐ.சி.சி.யின் இணை உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் 6 நாடுகள் தகுதிகாண் சுற்றில் மோதின.
இந்நிலையில் 10 அணிகள் கொண்ட பிரதான சுற்றுக்கு இறுதி இரு அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் இன்றுடன் நிறைவு காணும் நிலையில் தொடரின் அடுத்த கட்டமான பிரதான சுற்று இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது.
கத்துக்குட்டி அணிகள் மோதியதால் முதல் சுற்று இருபது–-20 போட்டிக்கே உரிய விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்காத நிலையில் இந்திய-– பாகிஸ்தான் அணிகளின் அதிரடியான முதல் போட்டியுடன் இன்று ஆரம்பமாகும் பிரதான சுற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 அணிகள் இரு பிரிவுகளாக களமிறங்கும் இப்பிரதான சுற்றில் பிரிவு '1' இல் இலங்கை, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் தகுதிகாண் சுற்றில் பிரிவு 'பி' யில் முதல் இடம் பெற்ற அணியும் மறுபக்கத்தில் பிரிவு '2' இல் நடப்பு சம்பியன் மேற்கிந்தியத்தீவுகள், அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிகாண் சுற்றில் பிரிவு 'ஏ' யில் முதலிடம் பெற்ற அணிகளும் இடம் பெற்றுள்ளன.
0 கருத்துகள்:
Post a Comment