உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதாக சந்திரிகா குற்றச்சாட்டு



தன்மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக இருந்து பதவி விலகியது முதல் தன் மீது இப்படியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்று ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காணிப்பின் காரணமாக தன்னைச் சந்தித்து விட்டு திரும்பும் தனது நண்பர்கள் சிலர் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு எதிரான இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு புறம்பானது மற்றும் ஒரு அடிப்படை உரிமை மீறல் என்றும் அவர் கூறியுள்ளார்.
தன் மீதான இந்த சட்டவிரோதக் கண்காணிப்பை நிறுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிடுமாறும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களது இந்தக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தனக்கு பெரும் அசௌகர்யத்தை ஏற்படுத்துவதுடன், தனது சொந்த பாதுகாப்புக்கு குந்தகமாக அமையலாம் என்றும் சந்திரிகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரான, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் நேரடியாக இயங்கும் உளவுப் பிரிவினரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வீடுகளின் மீதும், தொலைபேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றின் மீது இப்படியான கண்காணிப்புக்கள் நடப்பதாக அவர் கூறுகிறார்.
தன்னை சந்திக்க வரும் நண்பர்களை, தம்மை ''தேசிய குற்றப் புலனாய்வு பணியகத்தினர்'' என்று அறிமுகப்படுத்திக் கொள்வோர் விசாரணைகளுக்கு உட்படுத்துவதாகவும், ''என்ன பேசினீர்கள், யாரார் சந்திப்பில் கலந்துகொண்டார்கள்'' என்றெல்லாம் அவர்கள் மிரட்டும் தொனியில் விசாரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னை சந்திக்க வந்தவர்கள் விசாரிக்கப்பட்ட சில சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ள அவர், தான் தனிப்பட்ட காரணங்களுக்காக சென்று வந்த ஹொட்டல்களில் உரிமையாளர்கள் கூட விசாரிக்கப்பட்டதாகும் கூறியுள்ளார்.
இதனால், தன்னைச் சார்ந்தவர்கள் அச்சமடைந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், இவற்றை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.

0 கருத்துகள்: