உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

' வேடிக்கை பார்த்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்"



யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவரும் இளம் குடும்பஸ்தருமான அமலன் மைதானத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை வேடிக்கை பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட பொலிஸார் இருவரும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  விமலசேன தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம்  பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
பொன் அணிகளின் போர் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டியின் போது அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம்  அமலனின் கொலைச் சம்பவத்தின் போது, பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது அடித்துக் கொலை செய்த நபர்களை கைதுசெய்யுமாறு கூறியபோது பொலிஸார் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளனர்.

அவ்வாறு வேடிக்கை பாத்த பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று ஊடகவியலாளர்களினால்  கேள்வி எழுப்பட்டது.
 
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
சம்பவம் இடம்பெற்ற போது இரு பாடசாலை அதிபர்களும் சமுகமளித்திருந்தனர். ஆனால்  மாணவர்கள் மோதும் போது அதைத்தடுக்காமல்  பார்த்துக் கொண்டே நின்றுள்ளனர். அவர்களை தடுப்பதற்கு இரு பாடசாலை அதிபர்களும் முன்வரவில்லை.
 
அதேவேளை, இரு தரப்பினரும் மோதும் போது பொலிஸார் வேடிக்கை பார்த்ததாக அவ்விடத்தில் நின்றவர்கள் கூறியதற்கு இணங்க பொலிஸார் மீது விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. 
இந்நிலையில், இரு பொலிஸார் விசாரணையின் பின்னர் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
 
இதேவேளை அமலனின் கொலை சாட்சியங்களான அவரது நண்பர்களுக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் புலனாய்வு மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
 
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். சம்பவம் நடை பெற்ற அன்றைய தினம் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது சம்பவத்தினை பார்த்துக் கொண்டு நின்ற 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டோம்.
அதேவேளை, இரு இளைஞர்கள் மாத்திரமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும், மல்லாகம் நீதிமன்றத்திலும் சாட்சியமளித்ததுடன், தாக்குதல் சம்பவத்தினை மேற்கொண்டவர்களை நீதிமன்றில் அடையாளம் காட்டியுள்ளனர்.
 
இந்த வகையில், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்: