உலக கிண்ணத்தை வென்று தென்னாபிரிக்கா வரலாற்றில் புதிய சாதனை
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா முதல் முறையாக மகுடம் சூடியது.
16 அணிகள் கலந்து கொண்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான 10ஆவது இளையோர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராஜியத்தில் இரண்டு வாரங்களாக நடந்து வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான பாகிஸ்தானும், தென்னாபிரிக்காவும் டுபாயில் நேற்று சந்தித்தன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அல்லோல் பட்டது. 72 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், ஜாபர் கோஹரும் (22 ஓட்டங்கள்), அமத் பட்டும் (37 ஓட்டங்கள்) போராடி பாகிஸ்தான் மூன்று இலக்கு ஓட்ட எண்ணிக்கையை வைத்தனர். 44.3 ஓவர்களில் பாகிஸ்தான் 131 ஓட்டங்களுக்குள் சுருண்டது. தென்னாபிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளும், ஜஸ்டின் தில் 2 விக்கெட்டும், ரபடா ஒரு விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் யாசீன் வல்லி 2 விக்கெட்டும் சாய்த்தனர். விக்கெட் காப்பாளார் போர்டியூன் 6 பிடியெடுப்புகளை மேற்கொண்டிருந்தார்.
பின்னர் களம் இறங்கிய தென்னாபிரிக்க அணியில் பொர்டியூன் (1 ஓட்டங்கள்), ஜோசன் சுமித் (9 ஓட்டங்கள்) அடுத்தடுத்து வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து அணித் தலைவர் எய்டன் மோர்க்ரமும், கிரேக் ஓல்டுபைல்டும் பொறுமையாக ஆடி அணியை காப்பாற்றினர். ஓல்டு பைல்டு 40 ஓட்டங்களுடனும் (68 பந்து), அடுத்து வந்த யோசீன் வல்லி 1 ஓட்டங்களுடனும் அரங்கு திரும்பினர். என்றாலும் பதற்றமின்றி உறுதியுடன் விளையாடிய மோர்க்ரம் (66 ஓட்டங்கள், 125 பந்து, 6 பவுண்டரி) கடைசி வரை களத்தில் நின்று தென்னாபிரிக்காவின் கனவை நனவாக்கினார்.
42.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 134 ஓட்டங்கள் சேர்த்த தென்னாபிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய உலக சாம்பியன் ஆனது.
இதற்கு முன்பு இரண்டு முறை (2002, 2008) இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்த தென்னாபிரிக்க அணி, இந்த தடவை தோல்வியே சந்திக்காமல் முதல் முறையாக இளையோர் உலக கிண்ணத்தை கைப்பற்றி சரித்திரம் படைத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தென்னாபிரிக்க அணி, ஒரு உலக கிண்ணத்தை ருசிப்பது இதுவே முதல் முறையாகும்.
தேசிய அளவிலான உலக கிண்ண போட்டிகளில் (ஒரு நாள் போட்டி, இருபதுக்கு-20) தென்னாபிரிக்க அணி இறுதி சுற்றுக்கு கூட வந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment