தேர்தலுக்காக வாக்குகளைத் தேடும்போது அமெரிக்கா இலங்கைக்கு எதிராக வாக்குகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது - உதய கம்மன்பில
எதிர்வரும் மார்ச்சில் அரசாங்கம் தேர்தலுக்காக வாக்குகளைத் தேடும்போது அமெரிக்கா இலங்கைக்கு எதிராக வாக்குகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது. தீவிரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றியது யுத்த குற்றமென்றால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இம்முறை மாகாண சபை தேர்தல் மக்களின் ஆதரவினை நாட்டுக்காக வெளிப்படுத்தும் தேர்தலாகும். இலங்கை மக்களை விட்டுக் கொடுக்கக்கூடாதெனில் அனைவரும் எம்முடன் இணைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஹெல உறுமய கட்சியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கையில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுகின்றது. இதே காலத்தில் சர்வதேசத்திலும் இலங்கைக்கு எதிரான தேர்தலை அமெரிக்கா நடத்தியுள்ளது. நாம் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்றோம். ஆனால், ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார்.
ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றி இன்று அபிவிருத்தி கண்டு வரும் நாடாக இலங்கை வளர்ச்சி கண்டு வருகின்றது. இதனை தடுத்து இலங்கையை மத்திய கிழக்கு தீவிரவாத நாடுகளாக மாற்றவே மேலைத்தேய நாடுகள் முயற்சிக்கின்றது. இதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.
யுத்தத்தில் இருந்து கர்ப்பிணிப் பெண்களையும் சிறுவர்களையும் காப்பாற்றி வடக்கில் புதிய தமிழ் சமூகத்தினை உறுவாக்கிக் கொடுத்தமைக்காகவே சர்வதேசம் எம்மை யுத்த குற்றவாளியாக முத்திரை குத்தியுள்ளது. உண்மையிலேயே இலங்கையில் யுத்தத்தின் பின்னரே மனித உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது. வடக்கு தொடக்கம் தெற்கு வரையில் அனைத்து மக்களும் சுதந்திரமாக போய் வர முடிந்துள்ளது.
மொழிப் பிரச்சினைகளோ, இன அடக்கு முறைகளோ இன்று இல்லை. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் அரசாங்கம் துணை நிற்கின்றது. இவை அனைத்தையும் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நாட்டில் பிரிவினையினை தோற்றுவிக்கவில்லை. அடக்கு முறைகளை நாம் கையாளவில்லை. நாம் தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களின் விடுதலைக்கும் உயர் பாதுகாப்பிற்கும் துணை நின்றமை மனித உரிமை மீறல்களாகாது. இவை யுத்த குற்றமெனின் அவற்றினை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றோம்.
மேலும், இம்முறை மாகாண சபை தேர்தல் வெறுமனே கட்சி போட்டி மட்டுமல்ல. மக்களின் விருப்பத்தினை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் தேர்தலாகும். இலங்கையின் உண்மை நிலைமையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் தேர்தலாகும். இலங்கையை நேசிக்கும் மக்களை நாம் வாழும் மண்ணை விட்டுக்கொடுக்கக் கூடாதெனின் அரசாங்கத்துடன் கைகோர்த்து போராட வேண்டும் எனில் இம்முறை அனைவரும் எம்முடன் இணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment