தடுமாறும் இந்திய அணி : வலுவான நிலையில் நியூசிலாந்து
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகின்றது.
நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-0 என இழந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆக்லாந்தில் ஆரம்பமாகியது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்து அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்பத்தில் இந்திய அணியின் பந்து வீச்சிற்கு தடுமாறிய நியூசிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 30 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் வில்லியம்ஸனுடன் ஜோடி சேர்ந்த பிரண்டன் மெக்கலம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திரப்படுத்தனார்.
இவர்கள் இருவரும் சதமடிக்க வில்லியம்ஸன் 113 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 503 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மெக்கலம் 224 ஓட்டங்களையும்அண்டர்சன் 74 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக இசாந்த் சர்மா 6 விக்கெட்டுகளையும் சகீர்கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதலாம் இன்னிங்ஸிற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நியூசிலாந்தின் பந்து வீச்சிற்கு தடுமாறிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 10 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ரோஹித் சர்மா மற்றும் ரஹானேயின் இணைப்பாட்டத்தின் மூலம் இந்திய அணி சரிவில் இருந்து ஓரளவு மீண்டு இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுள்ளது
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரோஹித் சர்மா 67 ஓட்டங்களுடனும் ரஹானே 23 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment