உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

நான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருக்கிறேன் - ராகுல் காந்தி


tamizl-news-india 004465

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், பிரதமர் பதவியை ஏற்க தயார் என்று ராகுல் காந்தி கூறினார்.காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:–
காங்கிரஸ் கட்சியில் நான் ஒரு சிப்பாய். இதை சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன்.பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை நான் விரும்பவில்லை. அப்படி அறிவிப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. மேலும், தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது காங்கிரசின் வழக்கம் அல்ல.

இருப்பினும், தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், நான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருக்கிறேன்.நான் கேட்டுக்கொண்டபடி, மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 12 ஆக மத்திய அரசு உயர்த்தியதையும், தண்டனை பெற்ற எம்.பி.க்களின் பதவியை காப்பாற்றும் அவசர சட்டத்தை கைவிட்டதையும் வைத்து, நான்தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரே சாய்ஸ் என்று கூறப்படுவது சரியல்ல. தொண்டர்களின் உணர்வுகள் அடிப்படையில்தான் நான் மேற்கண்ட நிலைப்பாடுகளை எடுத்தேன்.
சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் ஒழுங்கீனம் நிலவுவது உண்மைதான். கட்சியில் ஒழுக்கத்தை புகுத்த நான் பாடுபட்டு வருகிறேன்.காங்கிரசில் ‘மேலிட கலாச்சாரம்’ நிலவுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவரிடமே நான் ஒப்படைத்து வருகிறேன்.
பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதை நான் ஆதரிக்கிறேன்.

0 கருத்துகள்: