6ஓட்டங்களால் 6ஆவது சதத்தை தவற விட்டார் தவான் - 265 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா
ஆசிய கிண்ணத் தொடரில் இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 265 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ள 12–வது ஆசிய கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில் போட்டியின் 4அவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பாதுல்லா அரங்கில் நடைபெறுகின்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இலங்கையும் இந்தியாவும் மோதுகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா வழமை போன்று 13 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தவானுடன் கோலி கைகோர்த்தார். தவான் நிதானமாக துடுப்பெடுத்தாடி கோலி சற்று அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.
இருவரும் இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களை பெற்றிருந்த போது கோலி அஜந்த மெண்டிஸ் பந்து வீச்சில் 48 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து அரைச்சதத்தை தவறவிட்டார்.
மறுபுறத்தில் அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தவானுடன் இணைந்த ரகானே 18 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். இதன்பின்னர் தவானும் அஜந்த மெண்டிஸின் பந்து வீச்சில் போல்ட் முறையில் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 6 ஆவது சசத்தை நழுவ விட்டார்.
இதன்பின்னர் களமிறங்கிய தினேஸ் கார்த்திக் 4, பினி 0, அஸ்வின் 18, புவனேஸ்குமார் 0 என சொற்ற ஓட்டங்களுடன் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். சச்சித்திர சேனாநாயக 3 விக்கெட்டுகளையும் அஜந்த மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
0 கருத்துகள்:
Post a Comment