உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

இலகுவான இலக்கை போராடி வெற்றி பெற்றது இந்தியா

அமித் மிஸ்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அடங்கிய சுழற் கூட்டணி பந்து வீச்சு பொறுப்பை தங்கள் வசம் எடுத்துக் கொள்ள ரோஹித் சர்மா, விராட்கோலி இணைந்து துடுப்பாட்ட இலாகாவை கவனித்துக் கொண்டனர். இதனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் பங்களாதேஷின் மிர்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கிலும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்துடனும் களமிறங்கியது.
 
நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற டோனி, முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தார்.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிர்பார்ப்புக்கு மாறாக மந்தமான தொடக்கத்தைத் தந்தது கிறிஸ் கெய்ல், ஸ்மித் கூட்டணி.
 
ஓட்ட கணக்கைத் தொடங்கும் முன் முகமது சமி பந்தில் கெய்ல் கொடுத்த பிடியெடுப்பை நழுவ விட்டார் முதல் ஸ்லிப்பில் இருந்த அஸ்வின். பின், 4ஆவது ஓவரில் கெய்ல் சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விரட்டி ஓட்ட கணக்கைத் தொடங்கினார். அதோடு, அமித் மிஸ்ரா ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் பறக்க விட்டார்.
 
ஆனால், 29 பந்துகளைச் சந்தித்து 11 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்த ஸ்மித்,  அஸ்வின் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார். அதன் பின் ஜோடி சேர்ந்த கெய்ல் மற்றும் சாமுவேல்ஸ் பெரிதாக ஓட்டம் குவிக்கவில்லை. 34 ஓட்டங்கள் எடுத்திருந்த கெய்ல் ரன் அவுட் முறையில் அரங்கு திரும்பினார். ஜடேஜா ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டிய சாமுவேல்ஸ் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பிராவோ ஓட்ட எதுவும் பெறாது வெளியேற அமித் மிஸ்ரா ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  டேரன் சமி அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.
 
ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் சிம்மன்ஸ் 2 சிக்ஸர்கள் விளாசினார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்ட்ங்களை எடுத்தது.
 
மேற்கிந்தியத் தீவுகள் பறிகொடுத்த 7 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகள் மிஸ்ரா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் இணைந்த சுழற்பந்து கூட்டணிக்கு கிடைத்தவை.  
 
சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவன் ஏமாற்றம் அளித்தார். அவர் எல்பிடள்யு முறையில் டக் அவுட்டில் ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய விராட் கோலியுடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார் ரோஹித். இருவரும் சீரான இடைவெளியில் மோசமான பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினர். சுனில் நரைன் ஓவரில் கிடைத்த "ஃப்ரி ஹிட்' வாய்ப்பை வீணடிக்காமல் ரோஹித் சிக்ஸர் அடித்தார்.
 
மறுமுனையில் விராட் கோலி வழக்கம்போல தனக்கே உரிய பாணியில் ஓட்டங்களை விளாசி அரைசதம் அடித்தார். ஆனால், 54 ஓட்ட்ங்கள் அடித்திருந்தபோது ரூசெல் பந்தில் கோலி ஆட்டமிழந்தார். அதன்பின் யுவராஜ், ரோஹித் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. பொறுப்புடன் ஆடிய ரோஹித் அரைசதம் அடித்தார். 
எளிதில் எட்டி விடும் இலக்கு, கைவசம் விக்கெட் உள்ளது என்றாலும் வீரர்கள் பெரிதாக துடுப்பெடுத்தாடவில்லை.

இதனால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. நெருக்கடியுடன் ஆடிய யுவராஜ் சிங் 10 ஓடட்ங்கள் எடுத்திருந்தபோது தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னா களமிறங்கி ஆட்டத்தை முடித்து வைத்தார். 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது.
 
ரோஹித் 62 ஓட்டங்களுடனும்;, ரெய்னா 1 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக மிஸ்ரா தெரிவு செய்யப்பட்டார்.

0 கருத்துகள்: