உங்களின் ஊர்களில் உள்ள விளையாட்டு செய்திகள் , பாடசாலை நிகழ்ச்சிகள் , மரண செய்திகள், ஏனைய செய்திகள் எங்களுக்கு அனுப்புங்கள் - E mail - unnaipoaloruthan@gmail.com

எமது கலாசாரத்தினை,பண்பாட்டை மாற்ற எமது சிறுவர்களை அனுமதிக்கும்போதே அவர்கள் தடுமாறும் நிலையேற்படுகின்றது –மட்டு.அரச அதிபர்


Chrles

எங்களுக்கென்று ஒரு இனம்,மொழி,கலாசாரம் இருக்கின்றது, நாங்கள் அந்த வழியில் வாழ்ந்தவர்கள். எங்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. 

இதையெல்லாம் மறந்துபோக எங்கள் சிறுவர்களை நாங்கள் அனுமதிக்கும்போதுதான் அவர்கள் நிலை தடுமாறி திசைமாறிச்செல்லுகின்ற நிலைமை ஏற்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் மட்டக்களப்பு சிறுவர் சபையினால் நடத்தப்பட்ட திறந்த கள நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தாய்ப்பாசம் என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமானது. 18வயதிற்கு மேற்பட்டவர்களை நாங்கள் வயதிற்கு வந்தவர்கள் என அடையாளமிட்டுக்கொள்கின்றோம். குழந்தையியலாளர்களின் கருத்துப்படி 18வயதிற்குப் பின்னர் உடல் ரீதியாக அவர்கள் வளர்ச்சியடைந்தவர்களாக இருந்தாலும் 24வயது வரை அவர்கள் உளரீதியாக முதிர்ச்சியடையாதவர்களாகவே இருக்கின்றார்கள். 

அந்த வகையில் பெற்றோர்களாகிய எங்கள் பணியும் அவர்களை அரவணைத்து நிற்கின்ற சமூகத்தின் பணியும் அவர்களுக்கு கல்வியூட்டிக்கொண்டிருக்கின்ற ஆசிரியர் சமூகத்தின் பணியும் பாரிய ஒன்றாக இருக்கின்றது.

பாடசாலைக்கு செல்கின்ற சிறுவர்கள் கல்வியை பெற்றுக்கொள்வது அவர்களது உரிமையாகும். அவர்கள் விரும்பிய வழியிலே அவர்களுக்கு கல்வி புகட்டப்படவேண்டும். ஆனால் அந்த உரிமை சலுகையாக மாற்றப்பட்டு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தான் அங்கு உரிமை மிக்கவர்களாகவும் அதிகாரம் மிக்கவர்களாகவும் இருக்கின்றார்கள்.

 அவர்களிடம் பிச்சையெடுப்பவர்களாக சிறுவர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
சிறுவர்கள் இந்த சமூகத்திலே தங்களுடைய உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்வதற்கு சகல உரித்தும் உடையவர்களாவார்கள். 

ஆனால் இந்த சமூகம் அவர்களுடைய அறியாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் சிறுவர் வேலை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுக்கொண்டு தங்களுடைய குறைகளை வெளியே சொல்ல முடியாதவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற குடும்பத்தில் ஏற்படுகின்ற குடும்பபிரச்சனைகள், பெற்றோர்களுடைய சமூகவியல் பிரச்சனைகள், அவர்களிடையே காணப்படுகின்ற சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் போன்ற அழுத்தங்களுக்கெல்லாம் சிறுவர்கள் முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் அழகான கட்டடங்கள்,அலுவலகங்கள், பாடசாலைகள் கட்டுவதால் இந்த சமூகத்தை அபிவிருத்தி செய்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை.

இங்குள்ள சிறுவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றார்களா, அவர்களுடைய தேவைகள் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளதா, அவர்கள் ஆரோக்கியமான மகிழ்ச்சியான குடும்பத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களா, அவர்களுக்கு கல்வியில் சரியான வசதி செய்துகொடுக்கப்படுகின்றதா, அவர்கள் வாழ்கின்ற சமூகம் அவர்களை சரியாக வழிநடத்திக்கொண்டிருக்கின்றதா, அவர்களுக்கு சரியான முறையில் மதப்போதனைகளும் அறநெறிகளும் எங்களுடைய கலாசாரங்களும் புகட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றதா என்பன பற்றி சிந்தித்துப்பார்க்கவேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.


நாங்கள் இன்று அந்நிய மோகம், வெளிநாட்டு கலாசாரம், இலத்திரனியல் ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, நவீன தொழினுட்பங்களின் ஆக்கிரமிப்பு போன்றவற்றின் மத்தியில் நாங்கள் எங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து எங்களுடைய விழுமியங்களையும் பண்பாடுகளையும் மறந்து முகவரிகள் தொலைந்தவர்களாக மாறியிருக்கின்றோம்.

இந்த நிலை எங்கள் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடாது. அவர்கள் நாங்கள் யார் என்று சொல்லி மார்தட்டி பெருமைகூறி வாழக்கூடியவர்களாக நாங்கள் அவர்களை உருவாக்க வேண்டும்.

எங்களுக்கென்று ஒரு இனம்,மொழி,கலாசாரம் இருக்கின்றது, நாங்கள் அந்த வழியில் வாழ்ந்தவர்கள். எங்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. இதையெல்லாம் மறந்துபோக எங்கள் சிறுவர்களை நாங்கள் அனுமதிக்கும் போது அவர்கள் நிலை தடுமாறி திசைமாறிச்செல்லுகின்ற நிலைமை ஏற்படுகின்றது.

இந்த நாட்டின், இந்த மாவட்டத்தின் சொத்து சிறுவர்களாவார்கள். இவர்கள் சரியாக வழிநடத்தப்படவேண்டும். சரியாக நோக்கப்பட வேண்டும். 

பண்படுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகம் செல்கின்ற நாற்பது மாணவர்களும் க.பொ.த.சாதாரண தரத்தில் 10ஏ எடுக்கின்ற நூறு மாணவர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்ற பத்துவீதமான மாணவர்களும் எங்கள் சொத்து அல்ல. 

அதை தவறவிட்டவர்கள்தான் எங்களுடைய சொத்து. அவர்களை தான் நாங்கள் வழிநடத்த வேண்டும். அவர்களில் தான் எங்கள் பார்வை இருக்க வேண்டும்.

சித்தாண்டி, வந்தாறுமூலை பகுதிகளில் பாடசாலைக் கல்வியை விட்டு நீங்கிச் சென்ற 35சிறுவர்கள் மீளவும் கல்வி நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

பிரதேச செயலாளர்கள் தங்களுடைய தலையாய பணியாக சிறுவர்களின் பிரச்சனைகளையும் தேவைகளையும் உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நாங்கள் இந்த மாவட்டத்தில் ஒரு மாற்றத்தை மிக விரைவில் ஏற்படுத்துவோம்.

ஊடகத்துறையினர் முக்கியமான சமூகப்பிரச்சனைகளை பாரபட்சமின்றி வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எங்களால் உடனடியாக எடுக்கப்படும்.

சிறுவர்கள் காப்பாற்றப்படவேண்டும். அவர்களின் உள்ளக்குமுறல்கள் தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் மனதளவில் சுதந்திரமானவர்களாக வாழவேண்டும். அதற்காக நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

0 கருத்துகள்: