முஸ்லிம்களை மலினப்படுத்துவதற்கு சர்வதேச சக்திகள் பொதுபல சேனாவுக்கு உதவி - ஹிஸ்புல்லாஹ்
இலங்கையில் முஸ்லிம்களை மலினப்படுத்துவதற்கு சர்வதேச சக்திகள் பொதுபல சேனாவுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு விடுதிக்கட்டிடத்தை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
உலகம் முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினையாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டு சக்திகள் முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதிலும் முஸ்லிம் நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதிலும் கங்கனம் கட்டி செயற்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் பலமாக இருந்த முஸ்லிம் நாடுகளாக ஈராக், எகிப்து, சிரியா, உட்பட லிபியா போன்ற நாடுகளில் இன்று நாளுக்கு நாள் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
ஈராக்கில் நாளுக்கு நாள் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. பலமான முஸ்லிம் அரசுகளை இந்த வெளிநாட்டு சக்திகள் பல வீனப்படுத்தி நலிவுறச் செய்யும் வேலைத்திட்டத்தினை அரங்கேற்றி வருகின்றார்கள்.
அமைதியாக இருந்த முஸ்லிம் நாடுகளில் மிக மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தி அங்கு இன்று கலவரங்களை தோற்றுவித்துள்ளனர்.
இந்த வகையில் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகளை மேற் கொள்வதற்கு பௌத்த தீவரவாத சக்தியான பொது பல சேனாவுக்கு வெளிநாட்டு சக்திகள் உதவி வருகின்றன.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கும் முஸ்லிம்களை மலினப்படுத்துவதற்கும், அரசாங்கத்திற்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கும் இந்த சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் சமூக நலன் விரும்பிகள், முஸ்லிம் சமூகம் மற்றும் முக்கியஸ்தர்கள் ஒன்று பட்டு பிரச்சகைளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment