இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது ஆஸி
இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்றியது.
அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
முதலில் இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை தன்வசப்படுத்தியிருக்க, நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
அந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைப்பெற்றது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோர்ஜ் பெய்லி 56 ஓட்டங்களையும் ஷோன் மாஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் ப்ரோட் மற்றும் ஸ்ரொக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் 218 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸியின் பந்து வீச்சிற்கு தாக்குப் பிடிக்க முடியாது 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதையடுத்து அவுஸ்திரேலிய அணி 4-1 என தொடரைக் கைப்பற்றியது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ரூட் 55 ஓட்டங்களையும் மேர்கன் 36 ஓட்டங்களையும் குக் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மெக்கெய் மற்றும் நெய்ல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக பெல்க்னர் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் ஆட்ட நாயகனாக ஆரோன் பின்ஞ் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 29 ஆம்திகதி புதன்கிழமை ஹோபாட்டில் இடம்பெறவுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment